சமீபத்தில் மனிதர்களின் வாழ்வியல் முறைகளில்

பெரும் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை

நம்மில் யாரும் மறுக்க முடியாது. ஆமாம், முன்பெல்லாம் நாம் நேரில் சந்திக்கும் நபர்கள் எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். இப்போதெல்லாம் உங்கள் ஊரில் கொரோனா எப்படி இருக்கிறது ? விசாரிக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் நலம் விசாரிப்பது கெரோனாவையா அல்லது கொரோனாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் நம்மையா என்ற கேள்வி நமக்குள் எழாமல் இல்லை.

கொரோனா வைரஸ் பற்றிப் பேசாத ஊடகங்களும் இல்லை. பேசாத உள்ளூர் வாய்களும் இல்லை. பாமர மக்கள் முதல் பாராளுமன்றம் வரை என்று உலக நாடுகள் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கொரோனா வைரஸ் உண்மையிலேயே மிகக் கொடியதா என்று கேட்டால்? நோய்கள் என்றாலே கொடியது தானே என்று சொல்ல முடியும். அந்த வகையில் இந்த கெரோனா ஒன்றும் அதற்கு விதி விலக்கல்ல. டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்ப்படுத்திய ஆரம்பக் காலங்களில் நோய் பரவிய நாட்களிலும் கொத்துக் கொத்தாக மனிதர்களை தினமும் காவு வாங்கிக் கொண்டே இருந்ததையும் அதைக் கடந்து வந்தவர்களுக்கு நன்றாக தெரியும். அப்படிப் பார்க்கையில் இந்த கொரோனா வைரஸ் கூட மக்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தையும் உயிர் பலியையும் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. இது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் கூட ஒருநாள் சட்டென மறைந்து போகக் கூடியது என்று சொல்லலாம்.

ஒருபுறம் இந்தக் ககொரோனா நோய்க் காலத்தில் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கும் ,சொந்த ஊர்களுக்கு பிழைக்க வழியின்றி திரும்பிச் சென்று இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலோனோர் மிகுந்த பொருளாதார சிக்கலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அன்றாடம் பிழைப்பு நடத்தி அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த கூலி தொழிலாளர்கள் பலரும் இன்று ஒரு வேளைச் சாப்பாட்டிற்கு கூட யாரோ ஒருவரின் கைகளை எதிர்பார்த்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையையும் நம் கண்ணால் காண முடிகிறது. இதெல்லாம் ஏதோ இயற்கையின் பேரிடர் காலம் என்று நாம் தலையில் அடித்துக் கொண்டாலும் ,நிஜத்தில் இந்த கொடுமையான நேரத்தில் இறைவன் எல்லோருக்கும் ஏதோ ஒரு பாடம் புகட்டிக் கொண்டுதான் இருக்கிறார்.

இந்தக் கொரோனா வைரஸ் உலகத்தின் பார்வையில்

மிகக் கொடிய வைரஸ் உருமாறியதும். அவற்றை சில ஊடகங்கள் உருமாற்றி இருப்பதையும்

நம்மால் உணர முடிகிறது.

சராசரியாக மனிதர்கள் ஒவ்வொருவரும் ஆங்காங்கே

ஏதேனும் ஒருவகையில் நோய் வாய்ப்பட்டு இறந்து கொண்டே தான் இருக்கிறார்கள். ஆயினும் இந்தக் கொரோனா

காலத்தில் எந்த நோய் வந்து இறந்து போனாலும் அது கொரோனாவாகத்தான் இருக்குமோ? என்ற அச்சம்

மரணத்தின் பிடியில் இருப்பவர்கள் மனதிலும் இல்லாமல் இல்லை. அதற்குப் பெரும் காரணமாகச் சொல்லக்கூடிய

ஒரே செய்தி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு தன் வாழ்நாளில் இத்துணை ஆண்டுகாலம் தன்னோடு வாழ்ந்து பழகிய உறவுகள், உடன் பிறப்புகள், நண்பர்கள் என யாரையும்

இந்த வைரஸால் பாதித்தவர்களை அருகில் அண்ட விடுவதில்லை. முகம் தெரியாத ஒரு மனிதனைப் போல கேட்பாரற்று அரசாங்க ஊழியர்களின் கைகளாலேயே அவர்களை அடக்கம் செய்து கொண்டிருப்பதை பார்க்கும் பொழுதுதான் உண்மையிலேயே பலருக்கும் நாளை நமது நிலையும் இப்படி ஆகி விடுமோ? என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

உண்மையில் சில ஊடகங்கள் தினமும் இதைத் தன் வாய்க்கு தீனி போடுவதைப் போல போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

இத்துணை பேர் பாதிக்கப்பட்டார்கள்......

இத்துணை பேர் இறந்தார்கள்......

இங்கே இவ்வளவு பாதிப்பு இருக்கிறது......

என்றெல்லாம் அவர்கள் திரும்பத் திரும்ப ஒரு நோயைப் பற்றிய அச்சுறுத்தலை மட்டுமே மக்களிடத்தில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஊடகமும், அரசாங்கமும் செய்ய வேண்டியது மக்கள் மனதில் நோயின் தாக்கம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் கூட அவர்களை அந்த நோயிலிருந்து குணப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையை தான் முற்றிலும் தர வேண்டும். ஒரு மருத்துவரின் மருந்து என்பது ஒரு மனிதனை 80% குணப்படுத்தும் என்றால் மீதமிருக்கும் 20% அவர்களின் தன்னம்பிக்கையும் துணிச்சலும் மன தைரியமும் தான்.

ஆனால், அடிப்படையில் இந்தக் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை காவு வாங்கிக் கொண்டு இருப்பது என்னமோ அவர்களின் தன்னம்பிக்கையும் பயமும் மட்டும்தான் தான். நாம் இறந்துவிடுவோமோ ? தன்னை இவர்களால் இனி காப்பாற்ற முடியாது. என்றெல்லாம் எண்ணி தான் பலரும் இறந்து போகக் கூடிய சூழலை நம்மால் உணரமுடிகிறது. உண்மையில் ஒரு நோய் நமக்கு வந்துவிட்டால் அந்த

நோய் எதிர்ப்பாற்றலை விடவும், அந்த நோயை சந்தித்துக் கொண்டிருக்கும் நாம் தான் அதற்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நம் மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை நம் மனதில் தோன்றிவிட்டால் போதும் எத்தகைய வியாதிகள் வந்தாலும், அதற்குச் சரியான மருந்து, மாத்திரைகள், ஆகியவற்றை நாம் மிகச் சரியாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நாம் அந்தக் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து வெளியேறி விட முடியும்.

எனவே இந்தக் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உங்களுக்கு அண்டை வீட்டிலோ, அல்லது

பக்கத்து தெருவிலோ அல்லது நெருங்கியவர்களாக

யாராவது இருந்தாலும் தயவு செய்து அவர்களை புறக்கணிக்காது அவர்களிடத்தில் ஆதரவாகப் பேசுங்கள். நம்பிக்கை கொடுங்கள். நோய் என்பது மீண்டு வருவதற்கு தானே தவிர மாண்டு போவதற்கு அல்ல என்பதை மீண்டும் மீண்டும் உறுதிபடச் சொல்லிக்கொண்டே இருங்கள்.

நாம் எற்றி வைக்கும் ஒற்றைத் தீக்குச்சியால் வெளிச்சத்தையும் கொடுக்க முடியும். வீட்டையும் கொழுத்த முடியும். அது ஏற்றிவைக்கும் கரங்களைப் பொறுத்தது.நீங்கள் எப்போதாவது வெளிச்சத்தை கொடுக்க விரும்பினால் நம்பிக்கைத் தீபத்தை மட்டுமே மக்கள் மனதில் ஏற்றுங்கள். நிச்சயமாக எனக்குள்ளும் அத்தகைய நம்பிக்கை இருக்கிறது. விரைவிலேயே மக்கள் இந்தக் கொடிய வைரஸில் இருந்து மீண்டு வருவார்கள். நம்புவோம் நம்பிக்கையை விடவும் மாமருந்து உண்டா என்ன?.......

த. இல. சின்னசாமி

0  0