இரட்டை குழந்தைகள்

profile
Rosy Angeline
Dec 07, 2019   •  5 views

       இரட்டை குழந்தைகள் இரட்டை சந்தோஷம் என்றபோதிலும், இரட்டைக் குழந்தைகளை கவனித்துக் கொள்வது என்பது கடினமான ஒன்றே. உங்களின் பெற்றோர் என்ற கதாபாத்திரத்தை அழகாக நடத்தி செல்ல உதவும், சிறுசிறு தயாரிப்புகளை குறித்து பார்ப்போம்.

பொருளாதார உதவி:

நீங்கள் ஒரு வேலைக்கு செல்லும் தாயாக இருக்கிறீர்களா? உங்களின் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சில காலமோ அல்லது தற்காலிகமாக விடுப்பு எடுக்க தீர்மானித்திருக்கிறார்களா? ஆம் எனும் பட்சத்தில் உங்களின் பொருளாதார இடைவெளியை நீங்கள் எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்பதை உங்கள் குடும்பத்தாருடன் முன்பே கலந்தாலோசிப்பதும் அதற்கான தகுந்த பொருளாதார ஏற்பாடுகளை செய்வதும் முதன்மையான காரியமாகும்.  ஏனெனில் சரியான திட்டமிட்ட பொருளாதார உதவி என்பது உங்களின் எதிர்காலத்தை சிறந்த முறையில் வழிவகுக்க உதவி செய்யும். குழந்தைகளை கவனித்துக்கொள்ள உதவியாளர்கள், குழந்தைகளுக்கான உடைகள், மருத்துவ செலவுகள் என எல்லாவற்றுக்கும் நீங்கள் இரட்டையாக செலவு செய்யப் போகிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்வது நல்லது.

ஆள் உதவி

குழந்தைகளை கவனித்துக் கொள்ள உங்களையும் சேர்த்து, குறைந்தபட்சம் இரண்டு பேராவது இருப்பது நல்லது. நீங்கள் குடும்பத்தாரிடம் இருந்து உதவி பெறும் பட்சத்தில் சிறந்தது. இல்லை என்றால் உதவிக்கு ஆட்களை அமர்த்துவதுஇல் இரண்டாம் கருத்தே வேண்டாம். ஏனென்றால் இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்ள போதிய ஆட்கள் இருந்தால் மட்டுமே உங்களின் பேறுகாலத்தின் தாய்மை அனுபவத்தை ரசிக்க முடியும். 

உடல் ஆரோக்கியம்

குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அதே நேரத்தில் உங்களின் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொள்வது சிறந்தது. உங்களின் ஆரோக்கியமே உங்கள் குடும்பத்தின் ஆணி வேராக இருக்கிறது. நீங்கள் பசியாக உணரும் போதெல்லாம் உணவை உட்கொள்வது சிறந்தது. சில தாய்மார்கள் குழந்தைகளுக்கு உணவளித்த பிறகே தாங்கள் உணவை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது கடினமான காரியமாகும். அதிலும் இரட்டை குழந்தைகளுக்கு உணவு அளிப்பது என்பது மிக கடினமான காரியமாகும். எனவே உங்களின் ஆரோக்கியத்தையும் தேக நலத்தையும் பிரதானமாக எண்ணுவது நல்லது.

நோய் தடுப்பூசிகள்

சில நோய் தடுப்பூசிகளின் விளைவுகளில் ஒன்று காய்ச்சலாகும். அவ்வகை நோய் தடுப்பு ஊசிகளை குறித்து முன்பே மருத்துவர் இடத்தில் கேட்டு அறிவது நல்லது. அவ்வகை நோய் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் பட்சத்தில் இரண்டு குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் கொடுக்காமல் மூன்று அல்லது நான்கு நாட்கள் இடைவெளி விட்டுக் கொடுப்பது நல்லது.  இது இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் காய்ச்சல் கொள்வதிலிருந்து தடுக்க ஒரு சிறந்த ஏற்பாடாகும். ஆனாலும் மருத்துவமனை அமைந்துள்ள தூரம், வாகன வசதி, குழந்தைகளின் பழகும் சுபாவம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டிய ஒன்றாகும். 

         சில சிறந்த முன்னேற்பாடுகள் மற்றும் குடும்பத்தாரிடம் இருந்து பெறப்படும் தகுந்த உதவிகள் ஆகியவை உங்களின் இரட்டை குழந்தைகளுக்கு வளமான வரவேற்பை நல்கும்.  நன்றி.

1



  1