குழந்தைப் பருவமும் குறிக்கோளும்

profile
Rosy Angeline
Dec 11, 2019   •  8 views

           மானிடராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நோக்கங்கள், குறிக்கோள்கள் இருக்கின்றன. இந்த குறிக்கோள்களுக்கும், நமது பால்ய பருவத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா ? வாருங்கள் அலசுவோம்.

             பெண்ணாகிய எனக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது இரண்டாம் பட்சமே. குடும்பம், குடும்ப நலம், கணவர், பிள்ளைகளை கவனித்துக் கொள்வது என்பதே எனது ஆழ்மனதில் நோக்கமாய் இருந்தது.

             என்னுடைய நான்கு வயதில் எங்களுடைய தந்தை எங்களை விட்டு சென்று விட, என் தாய் தன்னுடைய 3 பிள்ளைகளையும் காப்பாற்ற வேலைக்கு செல்லத் துவங்கினார். என் தாயை காலையில் நான் அரிதாகவும், பல மாலை நேரங்களில் நீண்ட காத்திருப்புக்குப் பின் எதேச்சையாகவும் காணமுடிந்தது. ஐந்து குடும்பங்கள் கொண்ட வாடகை குடியிருப்பு வீடுகளில் மற்ற பிள்ளைகளின் தாய்மார்கள் அவர்கள் பிள்ளைகளை சீராட்டி பள்ளிக்கு அனுப்புவதை பார்த்து ஏங்கிய நாட்களும் , அந்த ஏக்கமும் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. 4 முதல் 10 வயது வரை ஒரு குழந்தைக்கு கிடைக்க வேண்டிய தாயின் ஸ்பரிசத்தை இழந்து தவித்த என்னுடைய அதிகபட்ச கனவே வாழ்க்கையில் ஒரு சிறந்த தாயின் கதாபாத்திரத்தை ஏற்பதாக இருந்தது. நான் ஏங்கி தவித்த ஒரு கதாபாத்திரமாக நான் மாறுவதே என் ஆழ்மனதில் தேடலாக இருந்தது. "நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாகவே ஆகிறாய் " என்ற விவேகானந்தரின் வாக்கிற்கிணங்க, ' நீ வேலைக்கு செல்லாமல் இருப்பதே, எனது விருப்பம்' என்று சொல்லும் அன்பான கணவர் ஆளும், இரட்டை குழந்தைகளாலும் நான் என்று ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்.

             என் கணவருக்கோ உலகிலுள்ள அத்தனை நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது என்பதே வாழ்வின் குறிக்கோளாக இருக்கிறது. இது தற்போதைய நிலை. அவர் ஏன் இத்தகைய ஒரு குறிக்கோளை மேற்கொண்டிருக்கிறார்? அவரை பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள தூண்டுவது எது ? இதற்கும் அவரின் குழந்தை பருவத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? 

             மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலை என் கணவர் என்னுடன் பகிர்ந்துகொண்ட அவரின் சிறுவயது அனுபவங்கள் மூலம் தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன்.

           அவரின் அப்பா அம்மா இருவரும் வேலைக்கு சென்று உள்ளனர். ஒரே ஒரு மகன் - என் கணவர். ஒரே பிள்ளை என்பதால் வெளியில் சென்று விளையாட அனுமதி இல்லை. தெருவில் இறங்கியும் விளையாடக்கூடாது. இதே நிலை விடலைப் பருவம் வரை நீண்டிருக்கிறது. ஆண்பிள்ளை வீட்டிற்குள்ளேயே வைத்து வளர்க்கப்பட்டு இருக்கிறார். அவரின் லட்சியம் உலகம் முழுவதும் சுற்ற வேண்டும் என்று இருப்பதில் ஆச்சரியம் இல்லை தானே ?

              வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்தும் தன் பிள்ளைகளோடு இருப்பதே சுகம் என விரும்பும் நண்பர் ஒருவரை தெரியும். அவரின் பால்ய பருவத்தில் அவரது அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

               இன்று விரும்பியோ விரும்பாமலோ வேலைக்கு செல்லும் என் பல தோழிகளின் தாய்மார்கள் இல்லத்தரசிகள் ஆக இருந்தவர்கள். பொருளாதார விடுதலை, சமூக அந்தஸ்து என தன் தாய் இழந்தவற்றை, கண்டுணர்ந்ததின் வெளிப்பாடோ, இன்று எத்தனையோ இக்கட்டுகளுக்கு மத்தியிலும் வேலை என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கும் பெண்களின் நிலை.

           இன்று யூடியூபில் பல லட்சங்களை வாரி குவிக்கும், பல பேர் தங்களது பால்யத்தை குறித்து விவரிக்கும் அத்தியாயங்களில், அவர்கள் கடந்து வந்த பற்றாக்குறை வாழ்க்கை நிலையை முன்வைக்கின்றனர்.

             நம்முடைய இன்றைய தேடல், நாம் குழந்தை பருவத்தில் தொலைத்தவையோ? நம்முடைய எதிர்கால லட்சியம் நம் பால்ய பருவத்தில் நாம் இழந்தவற்றின் நீழ்ச்சியோ? நாம் இன்று கொண்டிருக்கும் குறிக்கோள்களுக்கும் நம் பள்ளி பருவத்தில் நாம் ஏங்கி தவித்தவற்றிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டோ? என்ற ஐயம் எனக்கு எப்போதும் இருக்கிறது.

                   உங்களுக்கு?

0



  0